ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தம்பதி பலி

ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தம்பதி பலி

Update: 2022-03-02 11:02 GMT
காங்கேயம் அருகே ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  கணவன்-மனைவி உயிரிழந்தனர்.கோவிலுக்கு சென்றபோது பரிதாப சம்பவம் நடந்தது.
தம்பதி
இதுகுறித்து போலீஸ்  தரப்பில் கூறப்படுவதாவது
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காந்திநகரை சேர்ந்தவர்  கோபி வயது 36. நெசவு தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா 24 இவர்களது மகன்  ஸ்ரீசரண்7.  கோபி தனது குடும்பத்துடன் ஊதியூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை ஒரு ஸ்கூட்டரில் கோபி தனது மனைவி  மல்லிகா மற்றும் ஸ்ரீசரணை அழைத்துக்கொண்டு ஊதியூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். 
இவர்களது ஸ்கூட்டர் காங்கேயம் - தாராபுரம் சாலையில் குள்ளம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மாலை 3.45 மணியளவில் சென்றது. அப்போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் பிடிப்பதற்காக ஸ்கூட்டரை  திருப்பி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக ஊதியூர், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மாட்டார் சைக்கிள், கோபி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக ேமாதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரும், ேமாட்டார் சைக்கிளும் சின்னபின்னமானது. ஸ்கூட்டரில் சென்ற கோபி, மல்லிகா, ஸ்ரீசரண் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஜெகநாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். 
பலி
இந்த விபத்தை பார்த்ததும்  அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயங்களுடன் இருந்த கோபி, மல்லிகா ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  மல்லிகாவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோவை செல்லும் வழியிலேயே மல்லிகா இறந்தார்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய ஊதியூர் கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்  என்பவரை கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல்  சிறுவனுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயத்தில் ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் காங்கேயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்