அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய சென்னையில் 367 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்

சென்னையில் 367 முக்கிய இடங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Update: 2022-03-02 09:08 GMT
சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தையொட்டி, சென்னையில் போக்குவரத்து போலீஸ் சார்பில் மோர் பந்தல் அமைத்து, போலீசாரின் தாகத்தை தணிக்க இலவசமாக மோர் வழங்கப்படும். அந்தவகையில் நேற்று சென்னை வேப்பேரி ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போக்குவரத்து போலீசாருக்கு இலவசமாக மோர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர் கபில் சி.சரத்கார், இணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன், துணை கமிஷனர் ஓம் பிரகாஷ் மீனா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-

சென்னையில் மோர் பந்தல் அமைத்து சாலைகளில் போக்குவரத்து சரி செய்யும் போலீசாருக்கு இன்று (நேற்று) முதல் 4 மாதங்களுக்கு (122 நாட்கள்) இலவசமாக மோர் வழங்கப்பட இருக்கிறது. போலீசாருக்கு காலை, மதியம் என ஒரு நாளைக்கு 2 முறை மொத்தம் 5 ஆயிரம் மோர் பாக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அரசு ரூ.30 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்துள்ளது. வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக அவர் மீது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. அந்த புகார் மீதான விசாரணை நடந்து வருகிறது.

மேலும், நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் தலைமறைவாக இருப்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 367 முக்கிய சந்திப்பு சாலைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து தினசரி 180 வழக்குகள் வரை போடப்பட்டு வருகிறது. சென்னையில் 2 கி.மீ. க்கு ஒரு போக்குவரத்து போலீஸ் என பொறுப்பு வழங்கப்பட்டு அங்கு போக்குவரத்து விதிமீறல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர் ஊக்குவிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டி சென்றால் அவர்களின் பள்ளியை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பிட்காயின் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் தொடர்ந்து வருகிறது. ‘ஆன்-லைன் லோன் ஆப்’ மூலம் கடன் பெற்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுபோன்ற சைபர் குற்றங்களுக்காக இணை கமிஷனர்கள் தலைமையில் 4 புதிய ‘சைபர் போலீஸ் நிலையங்கள்’ விரைவில் சென்னையில் அமைய இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்