குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 452 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரித்துள்ளார்.

Update: 2022-03-02 05:49 GMT
நாமக்கல்:-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 452 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரித்துள்ளார்.
குழந்தை தொழிலாளி மீட்பு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பள்ளிபாளையம் பகுதியில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு சிறுவன் மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். கலெக்டர் அந்த சிறுவனை குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் சங்ககிரி தொழிலாளர் துணை ஆய்வாளர் கோமதி, ராசிபுரம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மாலா, திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளர் மோகன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர்.அந்தோணி ஜெனிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
452 குழந்தை தொழிலாளர்கள்
இதற்கிடையே கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
18 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களின் மீது குழந்தை தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் பணியில் அமர்த்தப்படும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் இதுவரை 11 ஆண்டுகளில் 138 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 452 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இதுவரை குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்களின் மீது வழக்குகள் தொடரப்பட்டு, அபராதமாக ரூ.17 லட்சத்து 9 ஆயிரத்து 62 வசூலிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்திய நிறுவனங்களுக்கு குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை அபராதமும், 6 மாத சிறை தண்டனையும், மறுமுறை செய்தால் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலக எண் 04286 - 280056, திட்ட இயக்குனர் செல்போன் எண் 98421 96122 மற்றும் சைல்டு லைன் இலவச எண் 1098 ஆகியவற்றிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்