தர்மபுரி அருகே விவசாயி அடித்துக்கொலை மகன் கைது

தர்மபுரி அருகே குடும்ப தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-02 04:25 GMT
தர்மபுரி:
தர்மபுரி அருகே குடும்ப தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
தர்மபுரி அருகே உள்ள எம்.ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 62). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மூக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் இலக்கியா மதிகோன்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் விவசாயி பெருமாள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளின் சாவுக்கான காரணம் குறித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள். 
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பரிதாப சாவு
பெருமாளின் மகன் பிரகாஷ் (35) பொக்லைன் ஆபரேட்டர் உதவியாளராக  வேலைக்கு சென்று வந்துள்ளார். அதற்காக முன் பணம் வாங்கி கொண்டு வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தந்தை பெருமாள் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று இது தொடர்பாக தந்தை-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் தந்தையை ைகயால் சரமாரியாக அடித்து தாக்கி உள்ளார்.
இதில் காயமடைந்த பெருமாளை, குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். இதை பிரகாஷ் தடுத்துள்ளார். இதனால் பெருமாள் பரிதாபமாக இறந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடலை அவசர, அவசரமாக அடக்கம் செய்யவும் பிரகாஷ் முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
 மகன் கைது 
இதையடுத்து போலீசார் ஏற்கனவே பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரகாசை கைது செய்தனர். குடும்ப தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்