பெட்ரோல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தர்மபுரி:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவற்றின் சார்பில் பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜூனன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உர மானியங்களை ரத்து செய்யக்கூடாது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.