தர்மபுரி நகராட்சி 10 பேரூராட்சிகளில் தலைவர் துணை தலைவர் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தலைவர் துணை தலைவர் தேர்தலை விதிகளை பின்பற்றி முறையாக நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.

Update: 2022-03-02 04:25 GMT
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் தேர்தலை விதிகளை பின்பற்றி முறையாக நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம் 
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி பேசியதாவது:-
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை உரிய விதிகளின்படி சிறப்பாக நடத்த வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் மன்றக்கூட்டரங்கில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்.
விதிமுறைகள்
தர்மபுரி நகராட்சியின் தலைவர் பதவி பெண்கள் (பொது) எனவும், அரூர், பாப்பாரப்பட்டி ஆகிய 2 பேரூராட்சிகளின் தலைவர் பதவி பெண்கள் (பொது) எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பி.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் ஆகிய 3 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் எஸ்.சி. (பொது) எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மறைமுக தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், முத்தையன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மாரிமுத்து ராஜ், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்) ரவிச்சந்திரன், நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்