சத்தியமங்கலத்தில் பரபரப்பு; அரசு நிலத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட 50 தற்காலிக குடிசைகள் அகற்றம்

சத்தியமங்கலத்தில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட 50 தற்காலிக குடிசைகள் அகற்றப்பட்டது.

Update: 2022-03-01 22:13 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட 50 தற்காலிக குடிசைகள் அகற்றப்பட்டது. 
குடிசை அமைத்தனர்...
சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமராபாளையம் ஊராட்சியில் திட்டு குமரன் கோவில் அடிவாரத்தில்  வினோபாவின் பூமிதான திட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் பல ஆண்டுகளாக வெட்டவெளியாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.  இதனால் அது புறம்போக்கு நிலம் என்று கருதிய அப்பகுதி பொதுமக்கள் 50 பேர் நேற்று முன்தினம் இரவு அந்த இடத்தில் அவரவர் தாங்களாகவே அளவு பிரித்து தனித்தனியாக தற்காலிக குடிசை அமைத்துக்கொண்டார்கள்.  இதுபற்றி நேற்று காலை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தி நில வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, கொமராபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சிலம்பரசன் மற்றும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். 
அகற்றப்பட்டது
அதன்பின்னர் அதிகாரிகளும், போலீசாரும் தற்காலிக குடிசை அமைத்தவர்களிடம், இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. அரசின் அனுமதி இன்றி, எந்த ஆவணமும் இல்லாமல் இங்கு குடிசை அமைத்தது தவறு என்று விளக்கினார்கள். 
பின்னர் 50 குடிசைகளையும் பிரித்து, தென்னங்கீற்றுகளையும், மூங்கில்களையும் வேனில் ஏற்றி சத்தி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள். 
இதனால் இலவசமாக வீடு கட்ட இடம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்