மகா சிவராத்திரியையொட்டி கா்நாடகத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

சிவராத்திரியையொட்டி கர்நாடகத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தாிசனம் செய்தனர்.

Update: 2022-03-01 21:54 GMT
பெங்களூரு: சிவராத்திரியையொட்டி கர்நாடகத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தாிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி

கர்நாடகத்தில் நேற்று மகா சிவராத்திரி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர்.

 மேலும் பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி பெங்களூரு ஓல்டு ஏர்போர்ட் ரோட்டில் முருகேஷ்பாளையா பகுதியில் உள்ள 65 அடி உயர சிவன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் காத்து நின்று சிவனை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். மேலும் ஊதுவர்த்தியை ஏற்றி சிவன் பாதத்தை தொட்டு மனம் உருகி தரிசனம் செய்தனர். 

இதுபோல பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் உள்ள பெருமாள் கோவிலில் உள்ள சிவன் சிலைக்கும், மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சிவனுக்கு சிறப்பு ருத்ராபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். சிவராத்திரியையொட்டி இந்த கோவிலில் இன்று (புதன்கிழமை) கிரிஜா கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.

சிறப்பு பூஜைகள்

வடகர்நாடக மாவட்டமான உப்பள்ளி டவுனில் உள்ள 500 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் சிவராத்திரியையொட்டி 150 கிலோ எடை கொண்ட வெள்ளி சிவன் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதுதவிர கடலோர மாவட்டமான உத்தரகன்னடா மாவட்டம் கோகர்ணாவில் உள்ள மகா பலேஸ்வரர் கோவில், பட்கல்லில் உள்ள முருடேஸ்வர் சிவன் கோவில், கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோவில்.

விஜயநகர் மாவட்டம் ஹம்பியில் உள்ள படவிலிங்கா கோவில், பெலகாவி மாவட்டம் ஐகோலில் உள்ள லட்கன் கோவில், கானாப்புராவில் உள்ள இடகி மகாதேவா கோவில், சிவமொக்கா டவுன் வினோபாநகரில் உள்ள சிவன் கோவில், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள மலை மாதேஸ்வரா கோவில் உள்பட கர்நாடகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்