தம்மம்பட்டி அருகே இளம்பெண் மர்ம சாவு-கொலையா? போலீஸ் விசாரணை

தம்மம்பட்டி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-01 21:53 GMT
தம்மம்பட்டி:
தம்மம்பட்டி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பால்காரர்
தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி அங்கமுத்து மூப்பனார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27), பால்காரர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த செல்வம். இவருடைய மகள் உமாமகேஸ்வரி (18). இவர் செந்தாரப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வந்துள்ளார். 
அப்போது மணிகண்டனுக்கும், உமாமகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் செந்தாரப்பட்டியில் மணிகண்டன், தனது காதல் மனைவி உமாமகேஸ்வரியுடன் வசித்து வந்தார். 
மர்ம சாவு
இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை உமாமகேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகிறார்கள். 
மேலும் உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்