மகா சிவராத்திரியையொட்டி சேலத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மகா சிவராத்திரியையொட்டி சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்:
மகா சிவராத்திரியையொட்டி சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி
சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று இரவு முதல் விடிய, விடிய சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.
சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் சாமி கோவிலில் நேற்று மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட 4 கால பூஜைகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் சந்திரசேகரர் சவுந்தரவல்லி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஒவ்வொரு கால பூஜை நிறைவிலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று இரவு 7 மணிக்கு வீணை கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும், குரலிசை, சிவன் பக்தி பாடல்கள் பற்றிய நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் விடிய, விடிய கோவிலில் அமர்ந்து 4 கால பூஜையில் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் 4 கால பூஜை நடந்தது. முதல் கால பூஜை நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. அப்போது சுகவனேசுவரருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சாமிக்கு தங்க நாகாபரணம் சாத்துப்படி நடந்தது. இதையடுத்து 2-ம் கால பூஜை 11 மணிக்கு நடந்தது.
சாமி தரிசனம்
அதைத்தொடர்ந்து 1.30 மணிக்கு 3-ம் கால பூஜை நடைபெற்றது. இதில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும் தாழம்பூ சாத்துப்படி பூஜை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நடந்த 4-ம் கால பூஜையில் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் உற்சவர் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அங்கு சேலம் மாவட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் சேலம் டவுன் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் சாமிக்கு இரவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் பார்வதியுடன், காசிவிஸ்வநாதர் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அஸ்தம்பட்டி
அஸ்தம்பட்டி லட்சுமி சுந்தர நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி சுந்தரகணபதி கோவிலில் சிவன் சன்னதியில் இரவில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாநகரில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் குகை நரசிங்கபுரம் தெருவில் பிரசித்தி பெற்ற வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சமூக கூடத்தில் இஷ்ட லிங்க பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 3-ம் கால பூஜை நடைபெற்றது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மூலவருக்கு பிரதான அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமூக கூடத்தில் இஷ்ட லிங்க பூஜை, 1,000 பேருக்கு அன்னதானம், உச்சி கால பூஜை நடக்கிறது.
தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் சேலம் வீர சைவ ஜங்கம குல நண்பர்கள் குழுவினரால் நடத்தப்படும் ஸ்ரீ ஜங்கமேஸ்வரர், ஸ்ரீ வேத நாயகி அம்மன் சமேதரராய் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் சாமி திருவீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.