வீடு புகுந்து துப்பாக்கி முனையில் ஏ.பி.எம்.சி. முன்னாள் தலைவர் வீட்டில் ரூ.40 லட்சம் நகை, பணம் கொள்ளை
கோலாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக்கூறி வீடு புகுந்து துப்பாக்கி முனையில் ஏ.பி.எம்.சி. முன்னாள் தலைவர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்: கோலாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக்கூறி வீடு புகுந்து துப்பாக்கி முனையில் ஏ.பி.எம்.சி. முன்னாள் தலைவர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.எம்.சி. முன்னாள் தலைவர்
கோலார்(மாவட்டம்) டவுன் பைரேகவுடா நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். வியாபாரியான இவர் முன்னாள் ஏ.பி.எம்.சி. தலைவர் ஆவார். மேலும் இவர் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் சாப்பிட்டுவிட்டு தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அவரது வீட்டின் கதவை யாரோ மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். இதனால் விழித்தெழுந்த ரமேஷ் கதவை திறந்தார்.
அப்போது 6 பேர் கும்பல் அவரது வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் தாங்கள் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது என்றும் ரமேசிடம் கூறினர். மேலும் வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
ரூ.40 லட்சம் நகை, பணம் கொள்ளை
இதனால் ரமேஷ் பதற்றம் அடைந்தார். அதையடுத்து வீட்டில் இருந்த ரமேஷின் மனைவி மற்றும் மகனை எழுப்பினர். பின்னர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி, மகனை கட்டி போட்டனர். அதையடுத்து வீட்டில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் ரொக்கம், ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்தனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ரமேஷ், அவர்களிடம் நீங்கள் எந்தப்பிரிவை சேர்ந்தவர்கள், உங்களின் அடையாள அட்டைகளை என்னிடம் காண்பியுங்கள் என்று கூறி கேள்வி கேட்டார். அப்போது அவர்கள் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
தப்பி ஓட்டம்
அதையடுத்து அந்த மர்ம நபர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அவர்களது கூச்சல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டனர். பின்னர் இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
தனிப்படை அமைப்பு
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அவற்றை கைப்பற்றி அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் அவர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் கோலாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.