உக்ரைனில் ரஷியா தாக்குதலில் கர்நாடக மாணவர் பலி: பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்
கர்நாடக மாணவர் நவீன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடக மாணவர் நவீன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "உக்ரைனில் நடந்த தாக்குதலில் மாணவர் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துக்கம் ஏற்பட்டது. நான் அவரது தந்தையுடன் செல்போனில் பேசி ஆறுதல் கூறினேன். அவரது ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இளம் மருத்துவ மாணவர் உக்ரைனில் இறந்த தகவல் அறிந்து மிகுந்த துக்கம் அடைந்தேன். அவரது ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய பா.ஜனதா அரசின் தோல்வியில் இது நடந்துள்ளது. ரஷியா எச்சரிக்கை விடுத்தது. இந்தியர்களை மீட்க அரசுக்கு போதுமான நேரம் இருந்தது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.
எடியூரப்பா-குமாரசாமி
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உக்ரைனில் ரஷிய தாக்குதலில் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் நவீன் இறந்த செய்தி கேட்டு துக்கம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள பதிவில், "உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவரது ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும். அவரது பெற்றோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நவீன் உடலை மிக விரைவாக கர்நாடகம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.