பெண்ணுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடு்ங்காவல் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-03-01 21:02 GMT
கும்பகோணம்;
மெக்கானிக்கை தற்கொலைக்கு தூண்டிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடு்ங்காவல் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. 
பணப்பிரச்சினை
கும்பகோணம் பாணாதுரை வடக்குவீதி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி ஜெயசித்ரா(வயது47). இவருக்கும் கும்பகோணம் எல்லையா தெரு பகுதியைச் சேர்ந்த பிள்ளைநாயகி மகன் மகேஸ்வரன் (25)(மெக்கானிக்) என்பவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ஜெயசித்ரா மற்றும் மகேஸ்வரன் இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக  பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து ஜெயசித்ரா கும்பகோணம் கிழக்கு போலீசில் மகேஸ்வரன் மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். 
கைது
இந்தநிலையில் ஜெயசித்ரா மகேஸ்வரன் வீட்டுக்குச் சென்று அவருக்கு  மிரட்டல் விடுத்தார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகேஸ்வரனின் தாய் பிள்ளைநாயகி கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசித்ராவை கைது செய்தனர். 
7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் சார்பு கோர்ட்டில்  நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை அதிகாரியான கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு குறித்த ஆவணங்களை சமர்ப்பித்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மகேஸ்வரனை தற்கொலைக்கு தூண்டிய ஜெயசித்ராவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கும்பகோணம் கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்