மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஓதுவார் பயிற்சி மாணவர் காயம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஓதுவார் பயிற்சி மாணவர் காயம் அடைந்தார்.

Update: 2022-03-01 20:58 GMT
மதுரை, 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்கள் தங்கும் விடுதியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஓதுவார் பயிற்சி மாணவர் காயம் அடைந்தார்.
விடுதி மேற்கூரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி பிர்லா விஷ்ரம் என்ற பெயரில் கோவிலுக்கு அருகே மேற்கு சித்திரையில் உள்ளது. இங்கு கொரோனா காலக்கட்டத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே கோவில் நிர்வாகம் அந்த விடுதியை சீரமைக்கும் பணியை பகுதி பகுதியாக மேற்கொண்டு வருகிறது. மேலும் அங்குள்ள விடுதி பகுதியில் தான் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் கழிப்பறை, குளியல் அறைக்கு சென்று வருவார்கள்.
அந்த விடுதியில் சீரமைக்கப்பட்ட ஒரு அறையில் தான் மீனாட்சி அம்மன் கோவிலில் ஓதுவார் பயிற்சி பெறும் மாணவர்கள் கடந்த சில மாதங்களாக தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பயிற்சி பள்ளி மாணவர்கள் அந்த அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். திடீரென்று நள்ளிரவு 12.20 மணிக்கு அந்த விடுதி அறையின் மேற்கூரை பெயர்ந்து அதன் கீழே படுத்திருந்த மாணவர் தலை மீது விழுந்தது.
மாணவர் காயம்
அதில் தேனி மாவட்டம் பொம்மநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் மகன் ஜெயராமன் (வயது 16) காயம் அடைந்தார். அப்போது உடன் தங்கி இருந்த மாணவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். 
அங்கிருந்த டாக்டர்கள் மாணவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை எடுத்து பார்த்தனர். அதில் மாணவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், சிறிய காயம் தான் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் மாணவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து அவரை வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்குமாறு பரிந்துரை செய்தனர். இதற்கிடையில் மாணவரின் தந்தை தகவல் அறிந்து மதுரைக்கு வந்தார். அவருடன் மாணவர் தேனிக்கு புறப்பட்டு சென்றார்.
விசாரணை
இதற்கிடையில் தகவல் அறிந்து கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த விடுதி அறையை மூட உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு தங்கியிருந்த மாணவர்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். 
கோவில் நிர்வாகம் விரைந்து அந்த விடுதியை சீரமைத்து பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்