லாரி கவிழ்ந்து தொழிலாளி சாவு

கடையநல்லூர் அருகே லாரி கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-01 19:34 GMT
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே லாரி கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி கவிழ்ந்து விபத்து

வாசுதேவநல்லூர் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. அங்கிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கடையநல்லூர் அருகே மங்களாபுரம் என்ற இடத்தில் வந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளாணைகோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் தொழிலாளியான பாலகிருஷ்ணன் (வயது 40), நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், வைரமுத்து, ராமமூர்த்தி மற்றும் லாரி டிரைவரான வாசுதேவநல்லூர் புது காலனியைச் சேர்ந்த வெள்ளத்துரை உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் நாட்டாண்மை தெருவைச் சேர்ந்தவர் ராஜவேல் (60). இவர் நேற்று காலை கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது ராஜபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற சிமெண்டு லாரி ராஜவேல் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார், ராஜவேலை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்