செட்டிநாடு வீதிகளில் அணிவகுத்து வந்த பழங்கால கார்கள்
செட்டிநாடு வீதிகளில் அணிவகுத்து வந்த பழங்கால கார்கள்
காரைக்குடி
மும்பையைச் சேர்ந்த சுற்றுலா குழுவினர் மும்பையில் இருந்து புறப்பட்டு கேரளா வந்து சுற்றிப்பார்த்துவிட்டு, மூணாறு, மதுரை வழியாக நேற்று காரைக்குடி செட்டிநாடு பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் பழமையான கார்களில் வந்தனர். இந்த கார்கள் கடந்த 1918-ம் ஆண்டு முதல் 1961-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட கார்கள் ஆகும்.
இதில் கடந்த 1918-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை பயன்படுத்திய பி.பிக்.8, வி.டபுள்யூ. பி.கே., பேக்கார்டு, பென்ஸ் உள்ளிட்ட ரகங்களும், கடந்த 1950-ம் ஆண்டு பயன்படுத்திய மோரிஸ் மைனர், 1951-ம் ஆண்டு பயன்படுத்திய எம்.ஜி., 1956-ம் ஆண்டு பயன்படுத்திய மிவிசென்ட், 1957-ம் ஆண்டு பயன்படுத்திய இம்பாலா, பென்ஸ் 500, 1961-ம் ஆண்டு பயன்படுத்திய வில்லீஸ் வேகன், வி.டபுள்யு வான் உள்ளிட்ட கார்கள் குறிப்பிடத்தக்கவை.
காரைக்குடியை சேர்ந்த லெட்சுமணன் என்பவர் பழமையான பொருட்களை பாதுகாத்து வருகிறார். அவரது மையத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களையும் பார்வையிட்டனர்.
அதன் பின்னர் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் உள்ள செட்டிநாடு பங்களாவிற்கு பழமையான கார்களில் அணிவகுத்து வந்த சுற்றுலா குழுவினர், அங்குள்ள அரண்மனை முன்பு கார்களை அணிவகுத்து நிறுத்தினர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பழமையான கார்களை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து பழமையான கார்களில் புறப்பட்ட அந்த சுற்றுலா குழுவினர், புதுச்சேரியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.