சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு அபிஷேகம்- பூஜைகள்
சிவராத்திரி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை
சிவராத்திரி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவராத்திரி விழா
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத சிவராத்திரி விழாவில் சிவபக்தர்கள் விடிய, விடிய கண்விழித்து சிவபெருமானை தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று மாசி மாத சிவராத்திரி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள மருதீஸ்வரர் சன்னதியில் உள்ள சிவனுக்கு நேற்று 4 கால அபிஷேகம் நடைபெற்றது. முதல் அபிஷேகம் இரவு 8 மணிக்கும், 2-வது அபிஷேகம் இரவு 11 மணிக்கும், 3 கால அபிஷேகம் காலை 2 மணிக்கும், 4 கால அபிஷேகம் அதிகாலை 5 மணிக்கும் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வயிரவன்பட்டி வைரவநாத சுவாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி 4 கால பூஜையாக முதல் கால அபிஷேகம் மாலை 6.30 மணிக்கும், 2-வது கால அபிஷேகம் இரவு 8.30 மணிக்கும், 3-வது கால அபிஷேகம் நள்ளிரவு 12 மணிக்கும், 4- வது கால அபிஷேகம் அதிகாலை 4 மணிக்கும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் விடிய, விடிய கண் விழித்து தரிசனம் செய்தனர்.
குலதெய்வ வழிபாடு
இதேபோல் காரைக்குடி அருகே பாதரக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் மானாமதுரை, திருப்புவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன்கோவில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன் ஆகிய வாகனங்களில் வந்து தங்களது குலதெய்வங்களை தரிசனம் செய்தனர். முன்னதாக தங்களது குல தெய்வ கோவில்களில் காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முதல் நாள் சிவராத்திரி விழாவாகவும், 2-வது நாள் பாரிவேட்டை என்ற நிகழ்ச்சியாக சில கோவில்களில் சாமியாட்டம் நடைபெற்று கிடாய் வெட்டு நிகழ்ச்சியும், 3-வது நாள் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன் பின்னர் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கம். இதனால் கிராமங்களில் உள்ள முக்கிய கோவில்கள் இரவில் வண்ண அலங்காரத்தில் ஜொலிக்கும். இதேபோல் திருப்பத்தூர், சிவகங்கை, கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சிவலாயங்களில் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெற்றது.