சீர்காழி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் ராஜராஜேஸ்வரி என்கின்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயானசூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவை காவடி உள்ளிட்ட காவடிகளோடு கரகம் புறப்பட்டு வாண வேடிக்கை மேளதாளங்கள் முழங்க புதிய பஸ் நிலையம், பிடாரி கீழவீதி, தேர் மேலவீதி, கடைவீதி, பிடாரி தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், கச்சேரி ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது.
மயான சூறை நிகழ்ச்சி
பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மயான சூறை நிகழ்ச்சியை முன்னிட்டு அங்காளம்மன் வேடமணிந்து மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணியில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.