4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
நாகை அரசு ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
வேளாங்கண்ணி:
சிவகங்கை மாவட்டம் பூம்பிடாகை திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சூர்யா (வயது21).இவர் நேற்று காலை வேளாங்கண்ணி அருகே ஒரத்தூரில் கட்டபட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் தடுமாறி 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.