விவசாயி கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை
விவசாயி கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கரூர்
இடப்பிரச்சினை
கரூர் மாவட்டம், கடவூர் தெற்கு அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 55). விவசாயி. இவருக்கும் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராமனுக்கும் (61), இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அந்த பிரச்சினைக்குரிய இடத்தில் வேலி அமைப்பது தொடர்பாக லட்சுமணனுக்கும், ராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராமன் மரக்கட்டையை எடுத்து லட்சுமணனை தாக்கியுள்ளார். இதற்கு ராமனின் மனைவி சின்னப்பொண்ணு (59) உடந்தையாக இருந்துள்ளார். இதில் பலத்த காயத்துடன் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் லட்சுமணன் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆயுள் தண்டனை
இதையடுத்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி உயிரிழந்தார்.
இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ராமன் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் ராமனுக்கு ரூ.2 ஆயிரமும், சின்னப்பொண்ணுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தம்பதி இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.