மூதாட்டியை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
மூதாட்டியை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி வசந்தி (வயது 67). மகாலிங்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகனான சுந்தரலிங்கம் என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட காரணத்தால், தனது மருமகளான சுந்தரலிங்கத்தின் மனைவி ராதிகா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசந்தி வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வசந்தி சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த நடுபட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (50), அவரது மகன் மாதவன் (22) ஆகிய 2 பேரும் தங்களது வயல் பகுதி வழியாக வரக்கூடாது எனக்கூறி வசந்தியை திட்டி தாக்கியுள்ளனர். இதைப்பார்த்த ராதிகா மற்றும் அவரது மகள் கவுசல்யா அங்கு சென்று வசந்தி தாக்கப்படுவதை தடுத்துள்ளனர். மேலும் காயமடைந்த வசந்தியை அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வசந்தி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் மகேந்திரன், மாதவன் ஆகிய 2 பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.