வேன் கவிழ்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் 28 பேர் காயம்

மயிலாடுதுறையில், வேன் கவிழ்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் 28 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்ைசக்கு பின்னர் 23 பேர் வீடு திரும்பினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-03-01 17:55 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில், வேன் கவிழ்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் 28 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் 23 பேர் வீடு திரும்பினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளி வேன் கவிழ்ந்தது
மயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர், நீடுர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவரது வேனில் அனுப்பி வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம்போல் மனோகரன் தனது வேனில் ஏற்றிக்கொண்டு வந்தார். இந்த வேனில் மயிலாடுதுறை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர். 
அந்த வேன் கூறைநாடு வடக்கு சாலியத்தெரு வழியாக காளி கிராமத்தை நோக்கி சென்றபோது வடக்கு சாலியத்தெருவில் உள்ள பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டியின் மூடி வேன்சக்கரத்தில் சிக்கியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி வேன் கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்ததும்  டிரைவர் மனோகரன் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
28 மாணவ-மாணவிகள் காயம்
வேனில் சிக்கி கொண்ட மாணவ, மாணவிகள் சத்தம் போட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் வேனில் சிக்கியிருந்த மாணவ-மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில் வேனில் சென்ற ராமாபுரத்தை சேர்ந்த வர்ஷினி(வயது 11), திருமங்கலத்தை சேர்ந்த ரோகித்(12), யாசினி(14), ஆனந்தகுடியை சே்த மனிஷா(11), மாப்படுகையை சேர்ந்த சத்தியபிரியா(17), ஆர்த்தி(16), விக்னேஷ்(11), ஜெயஸ்ரீ(9), கனிஷா(5), ரத்னாஸ்ரீ(13), ஜனனி(14) உள்பட 28 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். 
காயம் அடைந்த மாணவ-மாணவிகள் அனைவரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் 23 மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீதமுள்ள 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான வேன் டிரைவர் மனோகரனை போலீசார் தேடி வருகின்றனர். 
கலெக்டர் ஆறுதல்
விபத்து குறித்து தகவல் அறிந்த கலெக்டர் லலிதா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ-மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் டாக்டர்களிடம் மாணவர்களின் நிலை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். 
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் ராகவன் ஆகியோரும் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்