‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை. போதுமான டாக்டர்களும் இல்லை. ஏலாக்குறிச்சி மருத்துவமனை ஆனது சுற்றியுள்ள பல பஞ்சாயத்திற்கு ஒரு மருத்துவமனையாக தான் உள்ளது. டாக்டர் ஒருவர் காலை 9 மணிக்கு வந்து மதியம் 1 மணிக்கு சென்று விடுவார். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் டாக்டர் இல்லாததால் அவதி அடைகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவீன்குமார், கரையான்குறிச்சி, அரியலூர்.
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், அக்கச்சிபட்டி-பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. காற்றில் குப்பைகளில் இருந்து வெளியேறும்பாலித்தீன் கவர்கள் ரோட்டில் பறந்து சாலையில் கிடக்கிறது. மேலும் வாகன பொதுமக்கள் மீது விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை.
புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தாலுகா அலுவலகம், வங்கிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இங்கு உள்ள பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்வது இல்லை. காரணம் அனைத்து பஸ்களும் வந்து நின்று செல்ல போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. எனவே அரவக்குறிச்சியில் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் அளவிற்கு போதிய இட வசதியுடன் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொ.மாயவன், அரவக்குறிச்சி, கரூர்.