கம்பிவேலி அமைத்து சாலையை அடைத்ததால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் பொதுமக்கள் தர்ணா சிதம்பரத்தில் பரபரப்பு
கம்பிவேலி அமைத்து சாலையை அடைத்ததால் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள கீழ குண்டலபாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 50 குடும்பத்தினர் கிராம எல்லையில் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராம பகுதிக்கு சென்று வந்த பாதையை, கிராம மக்கள் அடைத்தனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு அப்பகுதி பொதுமக்கள், கலெக்டர் மற்றும் சிதம்பரம் கோட்டாட்சியரிடம் கிராம பகுதிக்கு சென்று வர சாலை அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் கீழகுண்டலபாடி கிராம ஊராட்சி தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் வெற்றி பெற்ற சாந்தி பாலகிருஷ்ணன் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
தர்ணா
இதற்கிடையே பொதுமக்கள் கிராம பகுதிக்கு சென்று வந்த சாலையின் குறுக்கே அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கம்பிவேலி போட்டு வழியை அடைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் கிராம பகுதிக்குள் செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று தங்கள் குழந்தைகளுடன் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களை கிராம பகுதிக்குள் செல்ல விடாமல் அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை அகற்றி, தாங்கள் கிராம பகுதிக்குள் நடந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக கோட்டாட்சியரை சந்தித்து, மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.