சிதம்பரம் நடராஜர் கோவில் முன்பு 2-வது நாளாக போராட்டம் 33 பேர் கைது

சிதம்பரம் நடராஜர் கோவில் முன்பு 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update:2022-03-01 22:29 IST

சிதம்பரம், 

சிற்றம்பல மேடையில் ஏறி, நடராஜரை வழிபட சென்ற பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.  சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று கூறும் தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும். 

நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் நடராஜர் கோவிலில் முன்பு நேற்று முன்தினம் தெய்வத் தமிழ்ப்பேரவை, தமிழ்ப் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. தெய்வத் தமிழ்ப்பேரவை, தமிழ்ப் தேசிய பேரியக்கத்தினர் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம், தமிழ் மந்திரம் ஓதுவதற்காக தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நிர்வாகிகள் கீழ சன்னதியில் வழியாக கோவிலுக்குள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

இதனால் அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்கு தெய்வத்தமிழ் திருமுறை வழிபாட்டு இயக்கத்தை சேர்ந்த மோகனசுந்தரம் அடிகளார், தேவாரம், திருவாசகத்தை, பாடி கண்டன கோஷமிட்டார். இதையடுத்து 33 பேரை பேலீசார் கைது, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்