சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து ரூ.1¾ லட்சம் கொள்ளை

மன்னார்குடியில், சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-01 18:45 GMT
சூப்பர் மார்க்கெட்டில் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி:-

மன்னார்குடியில், சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

சூப்பர் மார்க்கெட்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தை சேர்ந்த முகமது அலியார்(வயது 36). இவர் மன்னார்குடி சிங்காரவேலு உடையார் தெருவில் வசித்து வருகிறார். 
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் முகமது அலியார் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 

ஜன்னல் கம்பி அறுப்பு

நேற்று காலை அவர் வழக்கம்போல் சூப்பர் மார்க்கெட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி அருகே சில்லறை காசுகள் சிதறி கிடந்தன. 
மேலும் அங்கு இருந்த ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரூ.1¾ லட்சம் கொள்ளை

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் கொள்ளையடித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்