பரங்கிப்பேட்டை அருகே கடலில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் உடல் கரை ஒதுங்கியது நண்பர்களை சந்திக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
பரங்கிப்பேட்டை அருகே நண்பர்களை சந்திக்க வந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் கரை ஒதுங்கியது.
பரங்கிப்பேட்டை,
மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் மைக்கேல் ரக்சன்புஷ்(வயது 21). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறையில் எருக்கூருக்கு வந்திருந்த அவர், பள்ளிப்பருவ நண்பர்களான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன், நடராஜன், முகமது ஆதம் ஆகியோரை சந்திக்க கடந்த 27-ந்தேதி வந்தார்.
கடலில் மூழ்கி மாயமானார்
பின்னர் அவர்கள் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு மைக்கேல் ரக்சன்புஷ் கடலில் குளித்தார். அவருடைய நண்பர்கள் கரையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மைக்கேல் ரக்சன்புஷ் திடீரென கடலில் மூழ்கி மாயமானார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மீனவர்கள் உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
உடல் கரை ஒதுங்கியது
இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீசாரும், மைக்கேல் ரக்சன்புஷ்சின் பெற்றோரும் விரைந்து வந்தனர். நேற்று முன்தினம் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. இதனிடையே இரவு 9 மணி அளவில் ரக்சன்புஷ், இறந்த நிலையில் அவரது உடல் புதுக்குப்பத்தில் கரை ஒதுங்கியது. உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்
கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.