பொள்ளாச்சி நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.;

Update: 2022-03-01 16:42 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். 

பதவி ஏற்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 151 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில் தி.மு.க. 30 இடங்கள், கூட்டணி கட்சியான ம.தி.மு.க. ஒரு இடம், அ.தி.மு.க. 3 இடங்கள், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

அதிக இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் தி.மு.க. நகராட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் நகராட்சி வார்டுகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற 36 கவுன்சிலர்களும் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பதவி ஏற்க உள்ளனர்

. அவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்காக நகராட்சி அலுவலக வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

தலைவர், துணை தலைவர்

புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றதும் நகராட்சி தலைவர் பதவிக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நகராட்சி மன்ற கூட்டரங்கில் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தலைவர் பதவிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

 இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தலைவர், துணை தலைவரை நகராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்றனர். 

தி.மு.க., ம.தி.மு.க. சேர்த்து 31 இடங்களில் வெற்றி பெற்று உள்ளதால் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தலைவர், துணை தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. 

இதற்கிடையில் தலைவர், துணை தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்