ஓசூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுமி பலி
ஓசூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாபமாக பலியானார்.;
ஓசூர்:
3 வயது சிறுமி
ஓசூரை அடுத்த பேரிகை அருகே நரசிபுரத்தில், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சொகுசு விடுதி உள்ளது. இங்கு நேபாளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகள் நிகில் சாண்டா (வயது 3). இந்த சிறுமி நேற்று மாலை விடுதியில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது திடீரென அவள் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி தண்ணீரில் மூழ்கினாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், சிறுமியை மீட்டு சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
சோகம்
அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொகுசு விடுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.