டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றிய குட்டி யானைக்கு சிகிச்சை

டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றி திரிந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த யானையை மரக்கூண்டில் அடைத்து பராமரிக்க திட்டமிடபட்டு உள்ளது.

Update: 2022-03-01 16:29 GMT
பொள்ளாச்சி

டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றி திரிந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த யானையை மரக்கூண்டில் அடைத்து பராமரிக்க திட்டமிட பட்டு உள்ளது.

காலில் காயம் 

ஆனைமலை புலிகள் காபபகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதியில் ஒரு குட்டி யானை கால்களில் காயங்களுடன் நின்று கொண்டிருந்தது. 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமையில் துணை இயக்குனர் கணேசன், கால்நடை டாக்டர்கள் சுகுமாறன், ராஜேஷ்குமார் உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் யானை இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

சிகிச்சை அளிக்கப்பட்டது

 பின்னர் யானைக்கு காயம் ஏற்பட்ட கால் பகுதிகளில் மருந்துகள் போடப்பட்டன. காலில் ஏற்பட்ட காயம் பெரிதாக இருந்ததால் அந்த யானையை கோழிக்கமுத்தி முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்ைச அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த குட்டி யானை லாரியில் ஏற்றப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கு அந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மரக்கூண்டு

தமிழக-கேரள வனப்பகுதியையொட்டி உள்ள டாப்சிலிப் பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க குட்டி பெண் யானை கால்களில் காயங்களுடன் நின்றது. மற்ற யானையுடன் சண்டை போடும் போது ஏற்பட்ட மோதலில் யானையின் கால்களில் காயம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. 

தற்போது யானைக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப் பட்டு உள்ளன. மேலும் தர்பூசணி, ஆப்பிள், மூங்கில், கரும்பு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. ஆனால் யானை கரும்பு மட்டும் சாப்பிட்டது. தற்போது டாக்டர்களின் அறிவுரையின் பேரில் யானைக்கு உணவு மற்றும் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. 

மேலும் கோழிகமுத்தி முகாமில் தனியாக கட்டி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தற்காலிக மரக்கூண்டு அமைத்து யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து பராமரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்