வீரக்குமாரசாமி கோவில் தேர் நிலைபெயர்தல்
வீரக்குமாரசாமி கோவில் தேர் நிலைபெயர்தல்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேர் நிலை பெயர்தல் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
வீரக்குமாரசாமி கோவில்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் புகழ் பெற்ற வீரக்குமாரசாமி கோவில் உள்ளது. இங்கு வீரக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியையொட்டி தேர் திருவிழா 3 நாட்கள் நடைபெறும். விழாவில் கோவிலைச் சேர்ந்த 11 குலத்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா கடந்த மாதம் பிப்ரவரி 14ந் தேதி காலை 9 மணிக்கு தேர் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து 23ந் தேதி காலை 9 மணிக்கு தேரில் கலசம் வைக்கப்பட்டது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் நிலை பெயர்தல் நேற்று நடந்தது. முன்னதாக காலை 10.30 மணிக்கு தேரில் சாமி எழுந்தருளினார். பெரிய தேரில் வீரக்குமாரசாமியும், வீரபாகும் எழுந்தருளினர். சின்ன தேரில் செல்லாண்டியம்மன் எழுந்தருளினர். பின்னர் மாலை 4 மணிக்கு செல்லாண்டி அம்மனுக்கு பள்ளய பூஜையும், வீரக்குமாரசாமி கோவிலில் உள்ள பள்ளய கருப்பண்ணசாமிக்கு பள்ளய பூஜையும் நடைபெற்றது. பின்னர் சோழீஸ்வரர் கோவிலுக்கு சென்று முதன்மை தாரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீரக்குமரனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேர் வடத்தை பிடித்து சிறிது தூரம் மட்டும் இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. நாளைவியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தேரோட்டம், திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிறகு சுவாமி தேர்பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு கோவில் வளாகத்தில் கடைகள் அமைத்துக்கொள்ளவும், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கபடவில்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடைகள் அமைக்க அனுமதிக்காததால் கோவில் அருகே உள்ள தனியார் இடத்தில் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சி அம்சங்கள் அமைத்திருந்தனர்.
மகா சிவராத்திரியான நேற்று மட்டும் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருந்தது. மற்ற திருவிழா நாட்களில் இரவு 10 மணி வரை மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும். கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரும் போது முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாத பக்தர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர் திருவிழாவையொட்டி வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தின் சார்பில் கோவில் வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு வாகனம் நிறுத்தி வைத்திருந்தனர்.
கலந்து கொண்டவர்கள்