நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 513 பேர் இன்று பதவி ஏற்கின்றனர்.

Update: 2022-03-01 14:46 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 513 பேர் இன்று பதவி ஏற்கின்றனர்.
இன்று பதவி ஏற்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 5 பேரூராட்சி கவுன்சிலர்கள் என 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 506 பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து கவுன்சிலர்களை தேர்வு செய்தனர். இவ்வாறு போட்டியின்றியும், தேர்தல் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்ட 513 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.
தலைவர் தேர்தல்
கவுன்சிலர்கள் பதவி ஏற்பை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 6 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. இதனால், தலைவர், துணைத்தலைவர் போட்டிக்கு மனு தாக்கல் செய்யப்போவது யார்? என்பதை முடிவு செய்யும் பணியில் தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கடுமையான போட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கடும் போட்டி
இதேபோல், 22 பேரூராட்சிகளில் 18 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியை மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது. பழனிசெட்டிபட்டி, க.புதுப்பட்டி பேரூராட்சிகளில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மேலும் வடுகப்பட்டி பேரூராட்சியில் சுயேச்சைகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அங்கும் தலைவர், துணைத்தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் பதவி ஏற்பு காரணமாக நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்