மாணவர்களுக்கு விழிப்புணர்வு கபடி போட்டி

கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கபடி போட்டி நடத்தப்பட்டது.

Update: 2022-03-01 14:31 GMT
கம்பம்:
கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் அரசு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை குட்டியம்மாள் வரவேற்று பேசினார். 
கபடி போட்டியை தலைமை ஆசிரியர் நாகரத்தினம், கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாணவர்களின் வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில், சீனியர் பிரிவில் அருள்குமார் அணியும், சூப்பர் சீனியர் பிரிவில் கவாஸ்கர் அணியும், ஜூனியர் பிரிவில் தரீஸ் அணியும் முதலிடம் பிடித்து பரிசு கோப்பையை வென்றனர். மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
இந்த விழிப்புணர்வு கபடி போட்டி குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கத்தை மாற்றுவதற்காக இந்த கபடி போட்டி நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு படிப்புடன், விளையாட்டு, ஓவியம், நாடகம், யோகா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் போது மாணவர்களுக்கு ஒழுக்கம், சிந்தனை, நல்ல பழக்கம் ஏற்படும் என்றனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்