அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா;
டுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் விநாயகர், முருகப்பெருமான், சப்தகன்னிகள், நவகிரக சன்னதிகளும் உள்ளன. கோவிலின் அடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. இந்த பஞ்சலிங்கங்களை தழுவியவாறு குருமலையில் இருந்து சின்னஞ்சிறு ஓடையாக தவழ்ந்து வரும் தோணிநதி, தேனாறு, பாலாறு மற்றும் துணை ஆறுகளுடன் பஞ்சலிங்க அருவியில் ஒண்றிணைந்து பயணித்து அடிவாரப் பகுதியில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள குன்றை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைகிறது.
அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்தால் உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறுவதுடன் மனநிம்மதியும் கிடைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தினமும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். மூர்த்திகளுக்கு மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஆண்டுதோறும் மாசி மாத மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகா சிவராத்திரி
அந்த வகையில் நேற்று திருமூர்த்திமலையில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. அப்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் மேளதாளங்கள் முழங்க பூலாங்கிணர் கிராமத்தில் இருந்து வேலூர், வாளவாடி, தளி ஆகிய ஊர்கள் வழியாக திருமூர்த்திமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த சப்பரத்தை பக்தர்கள் வணங்கினார்கள்.
பின்னர் அந்த சப்பரம் மீது பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த வாழைப்பழம், கல்உப்பு மற்றும் மிளகை வீசி வழிபட்டனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கொண்டைக்கடலை, மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்களை சப்பரத்துக்கு படைத்து வழிபட்டனர். இதனால் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு திருமூர்த்திமலை சென்றடைந்தது. அங்கு தயாராக இருந்த மலைவாழ் மக்கள் தங்கள் குல வழக்கப்படி மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சப்பரத்தை குன்றின் மீது வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலில் நான்கு நான்கு ஜாம கால பூஜைகள் தொடங்கி இன்று (புதன்கிழமை) காலை வரையிலும் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் வாகனங்களிலும் பாத யாத்திரையாகவும் திருமூர்த்திமலைக்கு வந்தனர்.
சிறப்பு பஸ் இயக்கம்
பின்னர் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்தும் சிவனுக்குரிய பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி மூர்த்திகளுக்கு நடைபெற்ற பூஜைக்கு தம்மால் இயன்ற அபிஷேக பொருட்களை கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக நேற்று போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி தளி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.