நீலகிரியில் பல்லுயிர் தன்மை பாதுகாப்பாக இருக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்
ஊட்டியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து 3 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நீலகிரியில் பல்லுயிர் தன்மை பாதுகாப்பாக இருக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என்று கல்லூரி முதல்வர் பேசினார்.
ஊட்டி
ஊட்டியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து 3 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நீலகிரியில் பல்லுயிர் தன்மை பாதுகாப்பாக இருக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என்று கல்லூரி முதல்வர் பேசினார்.
அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வேதியியல் துறை சார்பில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த 3 நாள் கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபனேசர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும்போது, புதிய திட்டங்கள் செயல்படுத்தும் போது சூழலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்.
சூழலியல் பாதுகாப்பில் கவனம் செலுத்த தவறிவிட்டோம். நீலகிரியில் பல்லுயிர் தன்மை பாதுகாப்பாக இருக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என்றார். உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேசும்போது, இந்தியாவின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக நீலகிரி மாவட்டம் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இங்கு வனவிலங்குகள், தாவரங்கள், பறவைகள், பல வகையான உயிரினங்கள் காணப்படுகிறது. சூழலியல் மாறாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை, சுற்றுச்சூழலை கொடுக்க வேண்டும்.
பருவநிலை மாறுபாடு
பருவநிலை மாறுபாடு காரணமாக மழை அளவு குறைதல், வெயில் அதிகரித்தல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தென்னகத்தின் நீர்த்தேக்க தொட்டியான நீலகிரி மூலம் பல்வேறு மாவட்டங்கள் பயனடைகிறது. பள்ளி மாணவர்கள் வேதியியல், அறிவியல் போன்ற பிரிவுகளில் விஞ்ஞானிகளாக உருவாகி நல்ல ஆராய்ச்சி திட்டங்களை வழங்க வேண்டும். நிறைகள் குறைகள் அறிந்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். சூழலியலை பாதுகாக்க இயற்கை உரங்கள் மூலம் விவசாயம் செய்ய வேண்டும் என்றார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆய்வகத்தில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் வரவேற்றார். நாளை (வியாழக்கிழமை) வரை கருத்தரங்கம் நடக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என 3 பிரிவாக அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.