ஊட்டி ஏரியில் ரேஷன் கோதுமை மூட்டைகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு
ஊட்டி ஏரியில் ரேஷன் கோதுமை மூட்டைகளில் கொட்டப்பட்டு கிடக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோதுமை மூட்டைகள்
ஊட்டி
ஊட்டி ஏரியில் ரேஷன் கோதுமை மூட்டைகளில் கொட்டப்பட்டு கிடக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோதுமை மூட்டைகள்
நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி கண்காணிக்கின்றனர். இதற்கிடையே ஊட்டி ஏரியின் ஒரு பகுதி கரையோரத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் கோதுமை கொட்டப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஊட்டி மான் பூங்கா செல்லும் சாலை ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது. இதை பயன்படுத்தி அருகே உள்ள ஏரி கரையோரத்தில் கோதுமை மூட்டைகளை சிலர் கொட்டி உள்ளனர். அங்கு மூட்டைகளில் கோதுமை தண்ணீரில் மூழ்கியும், வெளியே சிதறிய நிலையிலும் காணப்படுகிறது. 2 இடங்களில் கோதுமை மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டு கிடக்கிறது. சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போலீசார் விசாரணை
ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் கோதுமையை அட்டைதாரர்கள் வாங்கி காலாவதியானதால் ஏரியில் கொட்டப்பட்டதா அல்லது சீதோஷ்ண காலநிலையால் கெட்டுப்போனதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உணவில் முக்கிய பங்கு வகிக்கும் கோதுமை மூட்டை, மூட்டையாக ஏரியில் கொட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி கூறும்போது, ஊட்டி ஏரியில் ரேஷன் கோதுமை கொட்டப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தோம். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.