ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்
வறட்சியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்
வறட்சியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடும் வறட்சி
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் வறட்சியால் வனப்பகுதி பசுமை இழந்து வருகிறது.இதன் காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் முதுமலை கரையோரம் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் காட்டு யானைகள் அதிகளவு நுழைந்து வருகிறது. தொடர்ந்து வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கூடலூர் அருகே சிலுக்கு அடிப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பயிர்கள் சேதம்
இதனால் தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது. இருப்பினும் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. குறிப்பாக காலை நேரத்தில் காட்டு யானை முக்கிய சாலைகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வினி யோகிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் முதுமலை ஊராட்சி முதுகுளியில் தேவதாஸ் என்பவரது தோட்டத்தில் காட்டு யானை புகுந்து வாழைகளை நாசம் செய்தது. மேலும் அப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு பயிர்களையும் மிதித்து சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதியில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது என்று விவசாயிகள் கவலையுடன் கூறினர்.