ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்கப்போவது யார்? தி.மு.க.வினர் இடையே போட்டி
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்கப்போவது யார்? என்பதில் தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முதல் மேயர் யார்?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆவடி மாநகராட்சிக்கான 48 வார்டுகளில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 43 பேர் வெற்றி பெற்றனர். இதில் 35 பேர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள். ஆவடி மாநகராட்சி மேயர் பதவி, பட்டியல் வகுப்புக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஆண், பெண் என 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் மட்டும் 5 பேர் உள்ளனர். வருகிற 4-ந் தேதி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்கப்போவது யார்? என்பதில் தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்
அதன்படி ஆவடி மாநகராட்சியின் 14-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற ராஜேஷ்குமார், வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி அறிவிப்பு வந்ததும் அன்றே அமைச்சர் நாசரை சந்தித்து தி.மு.க.வில் இணைந்துவிட்டார். ஆவடி மேயர் பதவிக்கு ராஜேஷ்குமாரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர தி.மு.க.வைச் சேர்ந்த வீரபாண்டியன் (21-வது வார்டு), உதயகுமார் (9-வது வார்டு) மற்றும் ரமேஷ் (37-வது வார்டு) ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. இதில் ராஜேஷ்குமாருக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தி.மு.க.வினர் இடையே அதிருப்தியை ஏற்படு்த்தி இருப்பதாக தெரிகிறது.
துணை மேயர்
அதேபோல் துணை மேயர் பதவிக்கு தி.மு.க.வில் அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா (4-வது வார்டு), தி.மு.க. பகுதி செயலாளர் ராஜேந்திரன் (42-வது வார்டு) மற்றும் திருமுல்லைவாயல் தி.மு.க. பகுதி செயலாளர் பேபி சேகர் மனைவி அமுதா (28-வது வார்டு) ஆகியோர் பெயர்கள் பேசப்பட்டு வருகிறது.
இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர துணை மேயர் பதவியை கேட்டு தி.மு.க கூட்டணி கட்சிகளான தலா 3 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் தி.மு.க.விடம் கோரிக்கை விடுத்து உள்ளது.