வல்லூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் என்ஜினீயர் வீட்டில் நகைகள் கொள்ளை
வல்லூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயர் வீட்டில் 92 பவுன் தங்க, வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.;
அனல்மின் நிலைய அதிகாரி
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் வசிப்பவர் சுரேஷ்(வயது 55). இவர், வல்லூர் அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பவானி(50). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 26-ந் தேதி சுரேஷ் வீட்டை பூட்டிவிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்து தங்கினார். நேற்று முன்தினம் மாலையில் அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
92 பவுன் நகை கொள்ளை
இதையடுத்து சுரேஷ், அனல்மின் நிலைய குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது மர்மநபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்து இருந்த 92 பவுன் தங்க நகை மற்றும் வைர நெக்லஸ் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ேமலும் கொள்ளையர்கள் அனல்மின் நிலைய குடியிருப்புக்குள் பாதுகாப்பை மீறி எப்படி நுழைந்தனர்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.