உக்ரைன் எல்லையில் தவிக்கும் குமரி மாணவர்களை மீட்க வேண்டும்

உக்ரைன் மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் சிக்கி கடும் குளிரில் தவிக்கும் குமரி மாணவர்களை மீட்க வேண்டும் என அவர்களது பெற்றோர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-02-28 23:50 GMT
நாகர்கோவில்:
உக்ரைன் மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் சிக்கி கடும் குளிரில் தவிக்கும் குமரி மாணவர்களை மீட்க வேண்டும் என அவர்களது பெற்றோர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில்  அங்கு தங்கியுள்ள இந்திய மாணவர்களை மத்திய அரசு படிப்படியாக மீட்டு வருகிறது. மேலும் சில மாணவர்கள் உக்ரைன் நாட்டிலும், அதன் அண்டை நாடுகளிலும் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த செல்வராஜ், கன்னியாகுமரியை சேர்ந்த சகாய ஆண்டனி, எதழ்பிரட் உள்பட சிலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அரவிந்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் உக்ரைனில் மற்றும் எல்லைப்பகுதியில் கடும் குளிரில் தவிக்கும் தங்கள் பிள்ளைகளை மீட்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
ஏரோநாட்டிக்கல் மாணவர்
பின்னர் கருங்கல் பகுதியை சேர்ந்த  செல்வராஜ் கூறியதாவது:-
எனது மகன் அஸ்வின், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் நாட்டில் உள்ள கார்க்கி பகுதியில் ஏரோ நாட்டிக்கல் படிப்பதற்காக சென்றார். தற்போது அங்கு போர் நடந்து வருவதை அடுத்து கடந்த 3 நாட்களாக பதுங்கு குழியில் இருந்து வருகிறார். தினமும் வீடியோ கால் மூலமாக என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் குண்டு வீச்சு சத்தங்கள் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் பதுங்கு குழியை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் கூறினார். உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனது மகனுடன் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசு விரைந்து செயல்பட்டு மாணவர்கள் அனைவரையும் மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எல்லையில் தவிக்கும் மாணவர்கள்
கன்னியாகுமரியை சேர்ந்த சகாய ஆண்டனி கூறுகையில்:-
எனது மகள் கிரேஸ் ஸ்டெப்லின், உக்ரைன் வினிசியா பகுதியில் மருத்துவ படிப்பு 6-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் நடந்து வருவதால் எனது மகள் தோழிகளுடன் உக்ரைனில் இருந்து புறப்பட்டு ருமேனியா பகுதிக்கு வந்துள்ளார். அங்கு எல்லை பகுதியில் கடந்த 2 நாட்களாக தவித்து வருகிறார். எல்லை மூடப்பட்டுள்ளதால் அவர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது.
எனது மகளுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த சில மருத்துவ மாணவிகளும் தவித்து வருகிறார்கள். இன்று (அதாவது நேற்று) காலையிலும் ருமேனியாவில் இருந்து எனது மகள் என்னிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருவதாக கூறினார். எனவே எனது மகள் மற்றும் அவருடன் இருக்கும் மாணவிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார். 
கடும் குளிரில் தவிப்பு
கன்னியாகுமரியை சேர்ந்த எதழ்பிரட் கூறியதாவது:-
 எனது மகள் அபர்னா ஸ்வீட்டி, உக்ரைனில் மருத்துவ படிப்பு 6-ம் ஆண்டு படித்து வருகிறார். எனது மகள் மற்றும் அவரது தோழிகள் சிலர் ருமேனியா எல்லையில் கடும் குளிருக்கு இடையே தவித்து வருகிறார்கள். எல்லை பகுதியில் அவர்களுக்கு உதவ எந்தவித வசதிகளும் இல்லை என்று தெரிவித்தனர்.
எனவே அவர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினாா்.

மேலும் செய்திகள்