மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வேளாண் அதிகாரி உள்பட 2 பேர் பலி
மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வேளாண் அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
மேச்சேரி:
மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வேளாண் அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வேளாண் அதிகாரி
சேலம் மாவட்டம் மேட்டூர் பி.என்.பட்டி கிரீன்பார்க் தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 37). இவர், சீலநாயக்கன்பட்டியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். ஓமலூர்- மேச்சேரி சாலையில் கோல்காரனூர் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இளையராஜா சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜாவும், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பலியான இளையராஜாவுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளது தெரிய வந்தது. மேலும் பலியான இன்னொருவர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கந்தனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சிவா (24) என்பது தெரிய வந்தது. மேலும் சிவாவுக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகளும் உள்ளது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.