அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது.;

Update: 2022-02-28 22:16 GMT
அயோத்தியாபட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது.
ஒன்றியக்குழு தலைவர்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க.வினர் 6 பேரும், தி.மு.க.வினர் 6 பேரும், காங்கிரஸ் ஒருவரும், சுயேச்சைகள் 6 பேரும் கவுன்சிலர்களாக உள்ளனர். ஒன்றியக்குழு தலைவராக பார்வதி மணி பதவி வகித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 15 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர். ஒன்றிய குழு கூட்டத்தை கூட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் நடத்துவதற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் கடிதம் அனுப்பினார். அதன்படி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் விஷ்ணுவர்தினி தலைமை தாங்கினார். இதில் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. 3 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
எனவே ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தி.மு.க.வை சேர்ந்த ஒருவர், ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்