வாலிபர்களிடம் மோட்டார் சைக்கிள், பணம் பறித்த 2 பேர் சிக்கினர்
மதுரையில் போலீஸ் போல் நடித்து வாலிபர்களிடம் மோட்டார் சைக்கிள், பணம் பறித்த 2 பேர் சிக்கினர்.;
மதுரை,
மதுரையில் போலீஸ் போல் நடித்து வாலிபர்களிடம் மோட்டார் சைக்கிள், பணம் பறித்த 2 பேர் சிக்கினர்.
இன்சூரன்சு ஏஜெண்டு
மதுரை திருநகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), இன்சூரன்ஸ் நிறுவன ஏஜெண்டு. சம்பவத்தன்று இவர் வேலை தொடர்பாக பைபாஸ் ரோடு நேருநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்தனர். அதில் ஒருவன் காக்கி பேண்ட் அணிந்தும், மற்றொருவன் போலீஸ் கட்டிங் சிகை அலங்காரத்தில் இருந்தான். மேலும் இருவரும் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பின்னர் சங்கர் வந்த மோட்டார் சைக்கிளில் ஆவணங்களை காண்பிக்கும்படி மிரட்டினார்கள். உடனே அவர் வண்டியில் இருந்த ஆவணங்களை எடுத்து காண்பித்தார். அதனை சரிபார்ப்பது போல் நடித்த அவர்கள் ஆவணங்களின் தகவல்கள் சரியாக இல்லை என கூறினர். தொடர்ந்து சங்கரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2150 பறித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் நாளை காலை போலீஸ் நிலையத்தில் வந்து மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் மறுநாள் காலை திடீர்நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த விவரங்களை கூறி மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசார் நீங்கள் சொல்வது போல் இங்கு யாரும் பணிபுரியவில்லை. மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யவும் இல்லை என தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடம் எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகத்திற்குள் வருவதால் அங்கு சென்று விசாரித்து பாருங்கள் என்று சங்கரிடம் போலீசார் தெரிவித்தனர். அவரும் உடனே எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த வற்றை கூறினார். அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியபோது போலீஸ்காரர்கள் எனக்கூறி 2 மர்மநபர்கள் சங்கரை ஏமாற்றி பணம், மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றது தெரியவந்தது.
செல்போன் பறிப்பு
இந்த தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி மாநகர துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனை பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் குற்றவாளிகள் குறித்து விசாரணையும் நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (20) தனது நண்பர் ஜெகதீஸ் வரனுடன் சம்மட்டிபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களிடம் 2 பேர் போலீஸ் போல் நடித்து செல்போன்களை பறித்து சென்றதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
2 பேர் கைது
சங்கர், சதீஷ்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் பிடித்தனர். அதில் அவர்கள் மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சையது இப்ராகீம் (39), பழங்காநத்தம் ஆர்.சி. தெருவை சேர்ந்த ரஞ்சித் பாபு (42) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் போலீஸ் என கூறி மதுரையில் பலரிடம் கைவரிசை காட்டி வந்துள்ளனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.