காங்கிரஸ் பாதயாத்திரையின்போது ‘மேகதாது திட்டம் கர்நாடகத்தின் உரிமை’ என சூளுரை
மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ‘மேகதாது திட்டம் கர்நாடகத்தின் உரிமை’ என சூளுரைத்தனர்.
பெங்களூரு: மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ‘மேகதாது திட்டம் கர்நாடகத்தின் உரிமை’ என சூளுரைத்தனர்.
காங்கிரஸ் பாதயாத்திரை
மேகதாது திட்டத்தை அதாவது காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள சங்கமத்தில் தொடங்கியது. 4 நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் கொரோனா 3-வது அலை காரணமாக அதே மாதம் 13-ந் தேதி ராமநகரில் பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் மீண்டும் பாதயாத்திரை நேற்று முன்தினம் ராமநகரில் இருந்து தொடங்கியது. இதை அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தொடங்கி வைத்தார். முதல் நாள் பாதயாத்திரை 16 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பிடதியில் முடிவடைந்தது.
மகதாயி நதிநீர்
இந்த நிலையில் 2-வது நாள் பாதயாத்திரை நேற்று காலை பிடதியில் இருந்து தொடங்கியது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரது தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் சித்ரதுர்கா முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சிவாச்சார்யா கலந்து கொண்டார். இந்த பாதயாத்திரை வெற்றி பெற அவர் தனது வாழ்த்துகளை கூறினார்.
2-வது நாள் பாதயாத்திரை நேற்று மாலை பெங்களூருவின் புறநகரில் உள்ள கெங்கேரியை வந்தடைந்தது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள் இரவு தங்கினர். 3-வது நாள் பாதயாத்திரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கெங்கேரியில் இருந்து தொடங்கி பெங்களூருவுக்கு வருகிறது.
முன்னதாக பாதயாத்திரையின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர், ‘‘மேகதாது கர்நாடகத்தின் உரிமை. இதற்காக யாருடைய அனுமதியும் தேவை இல்லை. குடிநீருக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். குடிநீர் திட்டங்களுக்கு எந்த தடையும் இல்லை.
அதனால் மாநில அரசு உடனடியாக இந்த திட்ட பணிகளை தொடங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை என்றும், தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். நாங்கள் ஒற்றுமையாக தான் பணியாற்றுகிறோம். ஒற்றுமையாக தான் இந்த பாதயாத்திரையை நடத்துகிறோம்" என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு-மைசூரு ரோட்டில் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர். அந்த சாலையில் நடந்து வருவதால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.