தனியார் பஸ் மோதி 3 பேர் பலி
ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நடந்து சென்றவர்கள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்பள்ளாப்பூர்: ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நடந்து சென்றவர்கள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்
சிக்பள்ளாப்பூர் தாலுகா ஹென்னேனஹள்ளி கேட் அருகே நேற்று காலை சுமார் 10 மணி அளவில் ஆந்திர மாநிலம் கதிரி கிராமத்தைச் சேர்ந்த கவுஸ், அமேஜான் மற்றும் மேலும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஹொன்னேனஹள்ளி கேட் அருகே உள்ள ஓட்டலில் அவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர்.
பின்னர் 3 பேரும் வெளியில் வந்து மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிக்பள்ளாப்பூரில் இருந்து பாகேபள்ளிக்கு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.
3 பேர் சாவு
இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.