ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கும்பகோணம் அருகே கோவில் உரிமை தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-28 20:40 GMT
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே கோவில் உரிமை தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
மதுரை வீரன் கோவில்
கும்பகோணம் அருகே உள்ள அழகாபுத்தூரில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே  யாருக்கு உரிமை என்ற பிரச்சினை எழுந்தது. இந்த பிரச்சினை முற்றியதில் ஒரு தரப்பினர் கும்பகோணம் -திருவாரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தாசில்தார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. 
அமைதி பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த கோவில் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் என்றும் இதை யாரும் சொந்தம் கொண்டாட கூடாது என்று கூறினர். மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் கூறினர். மேலும் அதிகாரிகள் வருகிற 5-ந் தேதி(சனிக்கிழமை)  கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்