கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
பொது வழிப்பாதையை மீட்டுத்தர வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
பொது வழிப்பாதையை மீட்டுத்தர வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரதம்
கொரோனா பரவல் காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மக்கள் மனுக்களை போட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கிகுளம் இந்திராநகரைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், எங்களது ஊரில் காலங்காலமாக பொதுமக்கள் நடந்து சென்ற பாதையை ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார் இதுதொடர்பாக நாங்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தோம். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த நபர் மீண்டும் அந்த நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப்பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சுகாதாரமற்ற குடிநீர்
கங்கைகொண்டான் அருகே உள்ள அனைத்தலையூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் ஒரு வருடமாக 100 நாள் வேலை திட்டம் செயல்படவில்லை. எனவே அந்த திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். மேலும் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே தரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு பஸ்கள் முறையாக இயக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அப்போது அவர்கள், தரமற்ற குடிநீர் வருவதாக கூறி அந்த குடிநீரை பாட்டிலில் அடைத்து வந்து காட்டினார்கள்.
பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்து கலைஞர் நகர், ரவி சங்கர் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
நூலக கட்டிடம்
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், மானூர் யூனியன் பாலாமடை இந்திராநகரில் நூலகத்திற்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அந்த நூலகத்தை உடனே திறந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தகங்கள் படிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் மைக்கேல் மணிவண்ணன் ஆகியோர் கொடுத்த மனுவில், கிராம மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு கிராம சபை கூட்டம் செயல்படுவது போல் மாநகராட்சி மற்றும் நகராட்சி மக்களுடைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி உருவாக்க வேண்டும். இதேப்போல் பேரூராட்சி பகுதிகளிலும் ஏரியா சபை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.