அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்தவரும், நகராட்சி 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சேகர் (வயது 61) பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் எனது வீட்டு சுவற்றின் முன்புறத்தில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. கட்சி சார்பிலான சுவரொட்டியை எனது பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் நாகராஜ் (26) ஒட்ட வந்தார். இதனை கண்ட நான் சுவரொட்டியை இங்கு ஒட்டக்கூடாது என்று கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டி விட்டு, அலுமினிய பாத்திரத்தால் தாக்கி கீழே தள்ளினார். இதனை தட்டிக்கேட்ட எனது தம்பி குமாரையும் (58) தாக்கி கீழே தள்ளிவிட்டு, எனது மகன் வசந்தகுமாரையும் (31) தகாத வார்த்தையால் திட்டி விட்டு தப்பியோடினார். மேலும் நாகராஜின் தந்தை நடராஜ், தாய் செல்வேந்திரா ஆகியோரும் எங்களை தகாத வார்த்தையால் திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். நாகராஜின் தங்கை நந்தினியும் எங்களை தகாத வார்த்தையால் திட்டினாா். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை வலைவீசி தேடி வருகின்றனர். மேற்கண்ட சம்பவத்தில் காயமடைந்த சேகரும், குமாரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நாகராஜ், 3-வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.