வீடு புகுந்து 5 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

முத்தூர் அருகே பால் வியாபாரியின் வீடு புகுந்து 5 பவுன் சங்கிலியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-28 18:35 GMT
முத்தூர்
முத்தூர் அருகே பால் வியாபாரியின் வீடு புகுந்து 5 பவுன் சங்கிலியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தங்க சங்கிலி திருட்டு
முத்தூர் அருகே உள்ள மு.வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 40). இவரது மனைவி மாசிலாமணி (30).  இவர்கள் முத்தூர் - கொடுமுடி சாலை, சின்னமுத்தூர் பஸ் நிறுத்தம் பிரிவில் பால் விற்பனை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நல்லசாமி நேற்று காலை 7 மணிக்கு பால் கடையில் இருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். 
அப்போது அவரின் வீடு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்ட நிலையில் உள்ளே இருந்த துணிகள் சிதறி கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த நல்லசாமி, தனது மனைவி மாசிலாமணியை செல்போனில் தொடர்பு கொண்டு தங்க சங்கிலியை  எங்கு வைத்து உள்ளாய் என கேட்டு உள்ளார். அதற்கு மாசிலாமணி டி.வி. ஸ்டாண்ட் அருகில் வைத்து விட்டு பால் கடைக்கு வந்ததாக தெரிவித்து உள்ளார்.
பின்னர் நல்லசாமி அந்த இடத்தில் பார்த்த போது 5 பவுன் சங்கிலியை காணவில்லை. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யாரோ மர்ம ஆசாமி உள்ளே புகுந்து தங்க சங்கிலியை திருடி சென்றது தெரிய வந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து நல்லசாமி வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப் -இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நல்லசாமியின் வீட்டுக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். 
போலீஸ் விசாரணையில் நல்லசாமியின் வீடு புகுந்து 5 பவுன்  சங்கிலியை திருடிய சின்னமுத்தூர், நேதாஜி வீதியை சேர்ந்த நவீன்குமார் (22) என்பவரை கைது செய்தனர். 
தொடர்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்