அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ள சப்பரத்திற்கு சிறப்பு பூஜை

மகாசிவராத்திரியையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்ட செல்லப்பட உள்ள சப்பரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-02-28 18:18 GMT
உடுமலை
மகாசிவராத்திரியையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ள சப்பரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மகாசிவராத்திரி
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் மகாசிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
மகாசிவராத்திரி, தை அமாவாசை ஆகிய நாட்களில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கோவிலில் மும்மூர்த்திகள் குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதால் கோவிலில் கோபுரம் அமைக்கப்படவில்லை.
்சப்பரம்
அதற்கு பதிலாக மூங்கில் குச்சிகளைக்கொண்டு கோபுர வடிவில் செய்யப்பட்ட சப்பரத்தை குன்றின் மேல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த திருச்சப்பரம், கட்டளைதாரர்கள் மூலமாக உடுமலை அருகே உள்ள ஆர்.கிருஷ்ணாபுரத்தில், ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு அங்கிருந்து மகாசிவராத்திரியன்று திருமூர்த்திமலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். 
இந்த நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதன்படி உடுமலை அருகே உள்ள ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நேற்று மாலை சப்பரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு சப்பரத்திற்கு சிறப்புபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.
ஊர்வலம்
இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சப்பரம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக புறப்படும். ஊர்வலம் ஆர்.வேலூர், வாளவாடி, தளி வழியாக திருமூர்த்திமலையை சென்றடையும். இந்த சப்பரம் டிராக்டரில் வைத்து எடுத்து செல்லப்பட்டு வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லும். அந்தந்த கிராமங்களுக்கு சப்பரம் வந்ததும் அங்கு பக்தர்களால் வைக்கப்பட்ட உப்பு மிளகு குவியல் மீது சப்பரம் வைக்கப்படும். 
அங்கு பக்தர்கள் கொண்டு வந்த தேங்காய்கள் உடைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பக்தர்கள் நேர்த்திக்கடனாக வாழைப்பழம், சுண்டல் ஆகியவற்றை சப்பரம் மீது வீசிவழிபட்டுவர். மேளதாளத்துடன் நடைபெறும் இந்த ஊர்வலத்தின்போது கிராமங்களில் ஆங்காங்கு நடைபெறும் பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர். மாலை 4.30 மணியளவில் திருமூர்த்திமலையில் மும்மூர்த்திஆண்டவர் வீற்றிறுக்கும் குன்றின் மீது சப்பரம் நிலை ஏற்றுதல் நடைபெறும்.
சிறப்பு பஸ்கள்
மகாசிவராத்திரியையொட்டி பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு சென்று வருவதற்கு வசதியாக உடுமலையில் இருந்து இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை வரை விடியவிடிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்றும், பகல் நேரத்தில் வழக்கமாக சென்று வரும் பஸ்கள், எப்போதும் போன்று இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்